கரூர் மாவட்டம், தாளியாபட்டி கிராமத்தை சேர்ந்தவர் நீலமேகம் (33). இவர் மாநகராட்சிக்கு உட்பட்ட செல்லாண்டிபாளையத்தில் மனைவி ரஞ்சிதா (29) மற்றும் இரண்டு பெண் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இருவரும் கரூர் மாநகரில் உள்ள ஜவுளி ஏற்றுமதி நிறுவனத்தில் கூலி வேலை செய்து வருகின்றனர். கரூர் காமராஜபுரம் பகுதியில் அமைந்துள்ள தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் அவசர தேவைக்காக நீலமேகம் சில மாதங்களுக்கு முன்பு 60 ஆயிரம் ரூபாய் கடனாக பெற்றுள்ளார். இதற்கு மாத வட்டியாக 6,000 ரூபாயும், ஒரு மாதம் 4000 ரூபாயும் கட்டியதாக கூறுகிறார்.
இதற்கிடையில் உடல்நிலை பாதிக்கப்பட்டு நீலமேகத்திற்கு ஒட்டுக்குடல் அறுவை சிகிச்சை நடந்ததாகவும், அதன் காரணமாக தொடர்ந்து வட்டி கட்ட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த 28ஆம் தேதி செங்குந்தபுரம் பகுதியில் ரஞ்சிதா பணி முடிந்து வந்து கொண்டிருந்தபோது, பைனான்ஸ் நிறுவன உரிமையாளர் பாலசுப்பிரமணி, பங்குதாரர் சசிகுமார், ஊழியர்கள் பொன்னுச்சாமி, இளவரசன், சந்தோஷ் ஆகிய 5 பேரும் அந்தப் பெண்ணிடம் தகாத வார்த்தையில் பேசியதோடு, பொது இடத்தில் வைத்து அசிங்கப்படுத்தியதோடு, பைனான்ஸ் அலுவலகத்திற்கு கூட்டிச்சென்று வலுக்கட்டாயமாக பாலியல் ரீதியாக துன்புறுத்தி தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த ரஞ்சிதா சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக கரூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட ஐந்து பேர் மீதும், பெண்கள் பாதுகாப்புக்கு எதிரான சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், தான் வாங்கிய கடனுக்கு தனது மனைவியை இந்த நிலைக்கு ஆக்கிய நபர்களை இதுவரை போலீசார் கைது செய்யவில்லை என்பதை கண்டித்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நீலமேகம் புகார் அளித்துள்ளார். பைனான்ஸ் உரிமையாளரிடம் பேசிய ஆடியோவையும் வெளியிட்டுள்ளார்.
கடந்த ஓராண்டுக்கு முன்பு கரூரில் கந்துவட்டிக் கொடுமை தலை தூக்கிய நிலையில், தமிழகம் முழுவதும் கந்து வட்டி புகார்களுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இந்த நிலையில், கரூரில் மீண்டும் கந்து வட்டிக் கொடுமை தலை தூக்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.