தெலங்கானா மாநிலம் விகாராபாத்தைச் சேர்ந்த எம்.டி. பஸ்ரத் (32) என்பவர் பிழைப்புக்காக ஐதராபாத் நகரத்திற்கு வந்து, ஹபீஸ்பேட்டை பகுதியில் உள்ள ஆதித்யநகரில் தனது குடும்பத்துடன் தங்கி இண்டிரியர் டிசைனிங் வேலை செய்து வசித்து வருகிறார். இதற்கிடையில் கடந்த ஜனவரி 2023 இல், அஜ்மீர் தர்காவிற்குச் சென்றபோது, பஸ்ரத் கொல்கத்தாவைச் சேர்ந்த ஷபானா பர்வீனை (22) சந்தித்தார். அவர்களது அறிமுகம் காதலாக மாறியது. அவர்கள் இருவரும் அக்டோபர் 2024-இல் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்குப் பிறகு, இருவரும் ஆதித்யநகரில் உள்ள ஹபீஸ்பேட்டையில் குடியேறினர்.
திருமணத்திற்குப் பிறகு ஆரம்பத்தில் தங்கள் மாமியாருடன் வாழ்ந்தனர்.ஆனால் குடும்பத்தில் மோதல்கள் ஏற்பட்டதால் பஸ்ரத்தும், ஷபானா பர்வீனும் தனியாக குடியேறினர். ஷபானா பர்வீன் தற்போது இரண்டு மாத கர்ப்பிணியாக உள்ள நிலையில், மார்ச் 29 அன்று, வாந்தி எடுக்கத் தொடங்கியதால், ஷபானா பர்வீன் கொண்டாபூரில் உள்ள ராகவேந்திரா காலனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இரண்டு நாட்கள் மருத்துவமனை சிகிச்சைக்குப் பிறகு, ஏப்ரல் 1 ஆம் தேதி இரவு ஷபானா பர்வீன் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். மருத்துவமனையை விட்டு வெளியே கணவன், மனைவி இருவரும் வந்த போது மருத்துவமனை முன் சண்டையிட்டனர். இருவருக்கும் இடையே வாக்குவாதம் அதிகரித்ததால், பஸ்ரத் திடீரென தனது மனைவி பர்வீனைத் தாக்கினார். தெருவில் ஏற்பட்ட கைகலப்பில் கீழே விழுந்த தனது மனைவியை, அங்கே கிடந்த ஒரு பாறையால் தாக்கினார். சுமார் 10 முதல் 12 முறை கல்லால் தாக்கப்பட்டதில் ஷபானா பர்வீன் பலத்த காயமடைந்து மயக்கமடைந்தார். அவள் இறந்துவிட்டதாக நினைத்து பஸ்ரத் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.