திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உப்பிலியபுரம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட கோணக்கரை பகுதியில் வசித்து வருபவர் சிவக்குமார் வயது (55). இவரது மனைவி செங்கொடி (43). இவர்களுக்கு திருமணம் ஆகி 24 வருடங்கள் ஆகிறது. சிவக்குமார் காச நோயால் பாதிக்கப்பட்டு வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். இந்நிலையில் சிவக்குமாருக்கு மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் நேற்று இரவு கணவன் மனைவி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து செங்கொடி இரவு படுத்து தூங்கிகொண்டிருந்தபோது சிவக்குமார் வீட்டிலிருந்த அம்மி கல்லை எடுத்து செங்கொடியின் தலையில் போட்டு கொலை செய்துள்ளார்.
இதில் சம்பவ இடத்திலேயே செங்கொடி தலை நசுங்கி இரத்த வெள்ளத்தில் உயிரிழந்துள்ளார். சம்பவம் பற்றி தகவல் அறிந்த உப்பிலியபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து செங்கொடியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சிவக்குமார் மீது வழக்கு பதிந்து அவரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். மனைவியின் நடத்தையில சந்தேகம் ஏற்பட்டு கணவனே மனைவியை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.