திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில் பிரசித்தி பெற்ற கோயிலாகம். தமிழ்நாடு மட்டுமல்லாமல், வெளி மாநிலத்தில் உள்ள அம்மன் பக்தர்களும் இங்கு வந்து அம்மனை தரிசிக்கிறார்கள். இதனால் நாள்தோறும் இங்கு பக்தர்கள் கூட்டம் காணப்படும். குறிப்பாக ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் பக்தர்கள் ஏராளமானோர் வருகிறார்கள்.
கோயிலுக்கு வரும் பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்காக கோயிலில் ஆங்காங்கே உண்டியல்கள் வைக்கப்பட்டு உள்ளன. மாதம் சுமார் 1 கோடி ரூபாய் வரை உண்டியல் காணிக்கை கிடைக்கும். இந்த நிலையில் கோயில் அருகே ஒரு புதரில் கோயில் உண்டியல் ஒன்று உடைக்கப்பட்ட நிலையில் கிடந்தது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இது சமயபுரம் மாரியம்மன் கோயிலில் கொள்ளையடிக்கப்பட்ட உண்டியலாக இருக்கலாம் என பக்தர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து கோயில் நிர்வாகத்திடம் விசாரித்தபோது அந்த உண்டியல் கோயிலுக்கு சொந்தமானது இல்லை. அதுபோன்ற சிறிய உண்டியல்கள் கோயிலில் இப்போது பயன்படுத்தப்படுவதில்லை என்று விளக்கம் அளித்தனர்.