இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு, அக்டோபர் 7-ந்தேதி ஆயிரக்கணக்கான ராக்கெட்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதுடன் எல்லை பகுதியையும் சூறையாடி, வன்முறையில் ஈடுபட்டது. இதற்கு இஸ்ரேலும் பதிலடி கொடுத்து வருகிறது. இரு தரப்பினருக்கும் இடையேயான மோதல்50 நாட்களுக்கு மேலாக தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்த போரில் 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் உயிரிழந்தனர். 2,700 பேர் காணாமல் போயுள்ளனர்.இஸ்ரேலில் 1,200 பேர் உயிரிழந்து இருக்கின்றனர்.
இந்த சூழலில், இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு சம்மதம் தெரிவித்து உள்ளன. இதன்படி, கடத்தப்பட்ட 240 பேரில் பெண்கள் மற்றும் குழந்தைகள் என 50 பேர் 4 நாட்களில் அடுத்தடுத்து விடுவிக்கப்படுவார்கள். இதனால், இருதரப்பு மோதலும் 4 நாட்களுக்கு நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதன்படி, முதலில் 13 பேரும், பின்னர் 17 பேரும் என ஹமாஸ் அமைப்பு பிடித்து வைத்திருந்த பணய கைதிகள் அடுத்தடுத்து விடுவிக்கப்பட்டு உள்ளனர்.
எனினும், கடத்தப்பட்ட அனைவரையும் திரும்ப கொண்டு வரும் வரை, ஹமாஸ் அமைப்பினரை முழுமையாக ஒழிக்கும் வரை மற்றும் இஸ்ரேலுக்கு புதிய அச்சுறுத்தல் எதுவும் விடப்படாது என்பது உறுதி செய்யப்படும் வரை இஸ்ரேல் அரசு மற்றும் இஸ்ரேல் பாதுகாப்பு படை தொடர்ந்து போர் செய்யும் என்றும் பிரதமர் நெதன்யாகு அலுவலகம் வெளியிட்ட அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.
இந்த சூழலில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெளியிட்டு உள்ள எக்ஸ் சமூக வலைதள பதிவில், இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன மக்கள் என இருவருக்கும் நீண்டகால பாதுகாப்புக்கான உத்தரவாதம் வழங்குவதற்கு, இரு நாடு தீர்வே ஒரே வழியாக இருக்கும். இருதரப்பு மக்களும், சுதந்திரம் மற்றும் கண்ணியம் ஆகியவற்றை சமஅளவில் பெற்று வாழ்வது உறுதி செய்யப்பட வேண்டும். இந்த இலக்கை நோக்கிய பணியை நாங்கள் கைவிடமாட்டோம் என்று அவர் தெரிவித்து உள்ளார்.
இதேபோன்று பத்திரிகையாளர் சந்திப்பை நடத்திய அதிபர் பைடன் பேசும்போது, ஒவ்வொரு பணய கைதியும் விடுவிக்கப்பட்டு, அவர்களுடைய அன்புக்குரியவர்களிடம் திரும்பும் வரை ஈடுஇணையற்ற ஒத்துழைப்பை நாங்கள் நிறுத்தமாட்டோம் என உறுதிபட கூறினார். இது எனக்கும் மற்றும் என்னுடைய அணிக்கும், நிறைய கடின உழைப்பு மற்றும் பல வாரங்களாக மேற்கொள்ளப்பட்ட தனிப்பட்ட செயல்பாடு ஆகியவற்றின் பலனாக இருக்கும் என்று கூறினார். எகிப்து, இஸ்ரேல் மற்றும் கத்தார் ஆகிய பிற மேற்காசிய நாடுகளின் தலைவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்து வருகிறேன் என்றும் கடந்த சில வாரங்களாக அவர்கள் ஒவ்வொருவருடனும் பேசி வருகிறேன் என்றும் அவர் கூறியுள்ளார்.