நாமக்கல் மாவட்டம் பில்லாகவுண்டம் பட்டி பகுதியை சேர்ந்தவர் ராஜலிங்கம் மகன் காளியப்பன் என்பவர் காரில் தனது குடும்பத்தினருடன் மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காடு புதன் கோவிலுக்கு வந்துள்ளார். வழியில் நாராயணபுரம் கிராமத்தில் காரை நிறுத்தி முத்து முனீஸ்வரர் கோவில் எதிரில் உள்ள ஆலமர நிழலில் அமர்ந்து தங்கள் கொண்டு வந்த உணவை சாப்பிட்டுள்ளனர்.
அப்போது அந்த மரத்தில் கூடு கட்டி இருந்த மலைத்தேனீக்கள் அவர்களை கடித்துள்ளது. காளியப்பன் மற்றும் அவரது உறவினர்களான உதயசந்திரன், கலாவதி, தினேஷ், சுதர்சன், ஜனா, தமிழரசி ஆகிய 7 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தகவல் அறிந்த திருவெண்காடு போலீசாரின் பரிந்துரையின் பேரில் பூம்புகார் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் விரைந்து வந்து மரத்திலிருந்து 2 மலைத்தேனிக்களின் கூடுகளை அழித்தனர்.