கோவை, தொண்டாமுத்தூர் சுற்று வட்டார கிராமப் பகுதிகளில் விவசாயம் முதல் அனைத்து தொழில்களிலும் குறைந்த ஊதியத்தில் வட மாநில தொழிலாளர்களை பணியில் அமர்த்தி வருவதால், சுற்று வட்டார அருகே உள்ள கிராம பகுதிகளில் ஆயிரக் கணக்கான வட மாநில குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீடுகளுக்குள் மர்ம நபர்கள் கற்களை வீசுவதாக பொதுமக்கள் தொடர்ந்து புகார் கூறி வந்த நிலையில் அதனை கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி கண்காணித்து வந்தனர். அதில் வட மாநில சிறுவர்கள் அங்குள்ள வீடுகளில் கற்களை எரிந்து கண்ணாடிகளை சேதப்படுத்தி வந்தது தெரியவந்தது. வேறு ஏதேனும் அசம்பாவித சம்பவங்கள் ஏற்படும் முன்பு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் துறையில் புகார் அளித்துள்ளனர்.
இந்நிலையில் கெம்பனூர் பகுதியை சேர்ந்த டிரைவர் சக்திவேல், மணிமேகலை என்பவர் குடும்பத்தினருடன் கன்னியாகுமரிக்கு சுற்றுலா சென்று உள்ளார். பின்னர் இன்று திரும்பி வீட்டிற்கு வந்து பார்த்த போது வீட்டின்
பின்புற கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே சென்று பார்த்த போது திருடர்கள் இருப்பது தெரிய வந்தது. திருடர்கள் என கூச்சலிட்டதால் அருகில் இருந்தவர்கள் வருவதற்குள் அங்கு இருந்த நான்கு பேர் தப்பி ஓடி தோட்டத்திற்குள் புகுந்தனர். நீண்ட நேரம் போராட்டத்திற்கு பின்பு 3 பேரை பிடித்த பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து தொண்டாமுத்தூர் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் அவர்களை மீட்டு அருகே உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளித்தனர். பின்னர் அவர்களிடம் நடத்திய விசாரணையில் மேற்கு வங்காள மாநிலத்தைச் சேர்ந்த பர்வேஸ், கொல்கத்தாவைச் சேர்ந்த விக்கி (எ) தில்வர் லஷ்கர் மற்றும் கரீம் என்பது தெரியவந்தது. பின்னர் அங்கு இருந்து தப்பி ஓடிய மற்றொரு நபரை பொதுமக்கள் உதவியுடன் தேடி வருகின்றன. இதனால் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.