தஞ்சாவூர் சுந்தரம் நகரில் வீட்டு பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை திருடிய 2 பேரை தமிழ்ப்பல்கலைக்கழக போலீசார் கைது செய்தனர். 10 நாட்களுக்குள் விரைவாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்த போலீசாரை தஞ்சை மாவட்ட எஸ்.பி., ஆஷிஷ் ராவத் பாராட்டினார்.
தஞ்சாவூர் அருகே சுந்தரம் நகரைச் சேர்ந்த சந்திரசேகர் என்பவர் கடந்த 5ம் தேதி தனது வீட்டில் நகை மற்றும் பணம் திருடு போனது தொடர்பாக தமிழ்ப் பல்கலைக்கழக போலீசில் புகார் செய்தார். இதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் வல்லம் டி.எஸ்.பி. நித்யா மேற்பார்வையில் வல்லம் உட்கோட்ட தனிப்படை போலீஸ் எஸ்.ஐ., விஜய் தலைமையிலான போலீசார் பல கோணங்களில் விசாரணை மேற்கொண்டனர்.
இதில் சந்திரசேகர் வீட்டில் நகை மற்றும் பணத்தை திருடியவர்கள் தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த கருப்பசாமி (எ) பாஸ்கர் மற்றும் மதுரை மாவட்டம் சம்மட்டிபுரம் காலவாசல் பகுதியைச் சேர்ந்த கார்த்தி (எ) கார்த்திகேயன் என்பது தெரிய வந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் பாஸ்கர் மற்றும் கார்த்திகேயனை கைது செய்தனர்.
மேலும் அவர்களிடமிருந்து 25 பவுன் தங்கநகை மற்றும் 352 கிராம் வெள்ளி பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த வழக்கில் 10 நாட்களுக்குள் சிறப்பாக விசாரணை நடத்தி குற்றவாளிகளை கைது செய்து நடவடிக்கை மேற்கொண்ட போலீசாரை மாவட்ட எஸ்.பி., ஆஷிஷ் ராவத் பாராட்டி வாழ்த்துக்கள் தெரிவித்தார்.