ஆந்திர மாநிலம், அன்னமையா மாவட்டம், பெட்டிப்பா சமுத்திரம் மண்டலம், கனுகமாகுலப்பள்ளியை சேர்ந்தவர் கிருஷ்ணா ரெட்டி . இவர் அப்பகுதியில் புதியதாக வீடு கட்டி நேற்று கிரகப்பிரவேசத்திற்கு ஏற்பாடு செய்து இருந்தார். கிரகப்பிரவேசத்திற்கு தனது உறவினர்கள் நண்பர்கள் வந்திருந்தனர். விழாவிற்கு வந்தவர்கள் உணவு அருந்துவதற்காக வீட்டின் அருகிலேயே சாமியான பந்தல் போடப்பட்டிருந்தது. நேற்று காலை கிரகப்பிரவேசம் முடிந்து மதியம் 1.30 மணியளவில் விருந்தினர்கள் மதிய உணவு சாப்பிட பந்தலுக்கு கீழ் நாற்காலிகளில் அமர்ந்தனர். அப்போது திடீரென வீசிய பலத்த காற்றால் பந்தலின் ஒருபுறம் காற்றில் பறந்தது. டியூப்லைட் கட்டப்பட்டிருந்த மின்சார ஒயர் அறுந்து இரும்பு மேசையின் மீது விழுந்தது. சாப்பிட உட்கார்ந்து கொண்டிருந்தவர்கள் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் அங்கிருந்தவர்கள் தூக்கி வீசப்பட்டனர்.கொத்தப்பள்ளியை சேர்ந்த சின்ன லட்சுமம்மா (வயது 70), விஜயபிரசாந்த் (23) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். கோட்டகோட்டையைச் சேர்ந்த லட்சுமணா (53), சாந்தகுமாரி (54) ஆகியோர் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் இறந்தனர். கனுகமாகுலப்பள்ளியைச் சேர்ந்த திம்மையா, மூலக்கல்செருவைச் சேர்ந்த சுனிதா, ஓடிகிலோல்லப்பள்ளியைச் சேர்ந்த சுப்பம்மா (70) ஆகியோர் காயமடைந்தனர். அவர்கள் மதனப்பள்ளி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து தகவல் அறிந்ததும் போலீசார் மற்றும் மின்வாரிய அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.