வடமாநிலங்களில் கடந்த 8-ம் தேதி ஹோலி பண்டிகை கொண்டாடப்பட்டது. வண்ணப்பொடிகளை தூவியும், வண்ணம் கலந்த தண்ணீரை பிறர் மீது ஊற்றியும் ஹோலி பண்டிகை கொண்டாடப்பட்டது. அதேபோல், இந்தியாவுக்கு சுற்றுலா வந்துள்ள வெளிநாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகளும் பல்வேறு பகுதிகளில் நடத ஹோலி கொண்டாட்டத்தில் பங்கேற்றனர். இந்நிலையில், தலைநகர் டெல்லியில் பகர்கஞ்ச் பகுதியில் உள்ளூர்வாசிகளும், வெளிநாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகளும் சேர்ந்து ஹொலி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, ஜப்பானை சேர்ந்த பெண் பயணியிடம் சில இளைஞர்கள் பாலியல் ரீதியில் அத்துமீறலில் ஈடுபட்டனர். அந்த பெண் மீது முட்டையை வீசி, பாலியல் ரீதியில் அத்துமீற முயற்சித்தனர். தன்னிடம் அத்துமீறிய ஒரு இளைஞனை அந்த இளம்பெண் கன்னத்தில் அறைந்துவிட்டு அங்கிருந்து நகர்ந்து சென்றார். இது தொடர்பான வீடியோ சமூகவலைதளத்தில் வைரலானது.
இச்சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட வெளிநாட்டு பயணி புகார் அளிக்கவில்லை. ஆனால், சமூகவலைதளத்தில் வைரலான வீடியோவின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் ஹோலி கொண்டாட்டத்தின்பொது வெளிநாட்டு பெண் பயணியிடம் அத்துமீறலில் ஈடுபட்ட சிறுவன் உள்பட 3 பேரை கைது செய்தனர். அதேவேளை, அந்த பெண் சுற்றுலா பயணி தற்போது வங்காளதேசம் சென்றுவிட்டதாகவும், அவர் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் தற்போது நலமாக இருப்பதாக தெரிவித்துள்ளார் என்று டெல்லி போலீஸ் அறிக்கை வெளியிட்டுள்ளது. ஹோலி கொண்டாட்டத்தின் போது வெளிநாட்டு பெண் பயணியிடம் இளைஞர்கள் பாலியல் ரீதியில் அத்துமீறலில் ஈடுபட்ட சம்பவம் டில்லியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.