கர்நாடகாவில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகள் மற்றும் கேரள மாநிலம் வயநாடு உள்ளிட்ட பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. அங்கு கனமழை பெய்து வருவதால் கர்நாடகாவில் உள்ள கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் வினாடிக்கு 25 ஆயிரம் கனஅடிக்கும் மேல் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
இந்த தண்ணீர் தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக நேற்று முன்தினம் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லை வந்தடைந்தது. இந்த நிலையில், இன்று காலை நிலவரப்படி ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 17,000 கன அடியாக உயர்ந்துள்ளது. நேற்று 12 ஆயிரம் கன அடி நீர் வந்த நிலையில் தற்போது 17 ஆயிரம் கன அடி நீர் வந்துகொண்டிருக்கிறது. இந்த நீர் வரத்தின் அளவு மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாலையில் நீர்வரத்து 25 ஆயிரம் கனஅடியை தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது. நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக ஒகேனக்கல்லில் உள்ள மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.