7வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டிகள் சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. இதில் நடப்பு சாம்பியன் தென்கொரியா, முன்னாள் சாம்பியன்கள் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் மலேசியா, ஜப்பான்,சீனா ஆகிய 6 நாடுகள் பங்கேற்றுள்ளன. இந்நிலையில், ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி தொடரில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இந்தியா – மலேசியா மோதின. இப்போட்டியில் இந்தியா ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்தியது. ஆட்டத்தின் 15வது நிமிடத்தில் இந்திய வீரர் கார்திக் செல்வம் முதல் கோல் அடித்து அணியின் கோல் கணக்கை தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து 32, 42, 53 மற்றும் 54 ஆகிய நிமிடங்களில் இந்திய அணி அடுத்தடுத்து கோல் அடித்து அசத்தியது. அதேவேளை, மலேசியாவால் கடைசி வரை ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. இறுதியில், ஆட்டநேர முடிவில் இந்தியா 5 கோல் அடித்திருந்தது. மலேசியா கோல் எதுவும் அடிக்கவில்லை. இதனையடுத்து, மலேசியாவை 5-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றிபெற்றது.