தஞ்சையின் பல்வேறு பகுதிகளில் உள்ள பொதுமக்களிடமிருந்து ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி அதை அதிக விலைக்கு விற்பதாக தஞ்சை மாவட்ட உணவு கடத்தல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் துணைப் போலீஸ் சூப்பிரண்டு சரவணன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் முருகானந்தம் மற்றும் சப் இன்ஸ்பெக்டர் பிரசன்னா ஆகியோர் தலைமையில உணவுக் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அதை தொடர்ந்து தஞ்சை வடக்கு அலங்கம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக தகவல் கிடைத்ததையடுத்து அங்கு சென்று சோதனை செய்தனர். சோதனையில் தலா 50 கிலோ எடை கொண்ட 23 மூட்டைகளில் 1150 கிலோ ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அரிசியை பதுக்கி வைத்திருந்ததாக வடக்கு அலங்கத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் ( 48) என்பவரை போலீசார் கைது விசாரணை செய்தனர். விசாரணையில் தஞ்சையை அடுத்த கரந்தை, பள்ளியக்கரகாரம், கீழவாசல் மற்றும் தஞ்சையில் உள்ள பல்வேறு பகுதிகளில் பொதுமக்களிடமிருந்து குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி அதிக விலைக்கு இட்லி மாவு அரைப்பதற்கும் மீன் பண்ணைக்கு விற்பதற்காகவும் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து கைது செய்யப்பட்ட ராஜேந்திரனை போலீசார் கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.