மயிலாடுதுறை அருகே மணல்மேடு பகுதியைச் சேர்ந்த கடுவங்குடியில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி கடந்த 75 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இதில் கடந்த பத்தாண்டுகளுக்கு முன்பு தலைமை ஆசிரியராக முருகையன் என்பவர் பணியில் சேர்ந்தார். அவர் பள்ளியில் சேரும்பொழுது 20 மாணவர்கள் மட்டுமே இருந்த நிலையில் தொடர்ந்து அவருடைய உழைப்பால் இன்று 100 மாணவர்கள் பள்ளியில் படித்து வருகின்றனர்.
இப்பள்ளியில் இரண்டு ஆசிரியர்கள் ,ஒரு தலைமை ஆசிரியர் உட்பட மூன்று பேர் பணியாற்றி வருகின்றனர்.
திடீரென்று நேற்று தலைமையாசிரியர் முருகையன் பணி மாறுதலாகி சென்றுவிட்டார். இன்று பள்ளிக்கு வந்த மாணவர்கள் தலைமையாசிரியர் வராததை கண்டு அதிர்ச்சி அடைந்து வகுப்பை புறக்கணித்து வகுப்பறை முன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வேண்டும் வேண்டும் எங்கள் முருகையன் தலைமையாசிரியர் வேண்டும் என்று அவர்கள் முழக்கமிட்டனர். இதற்கிடையே பெற்றோர்கள் மற்றும் ஊர் மக்கள் ஒன்று திரண்டு போராட்டத்தில் இறங்கியதால் மணல்மேடு காவல் நிலைய ஆய்வாளர் ராஜா மற்றும் போலீசார் மாணவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி மாணவர்களை வகுப்புக்குள் அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி தலைமை ஆசிரியர் மீண்டும் வரும் வரை தங்களது போராட்டம் தொடரும் என்று மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கூறியுள்ளனர்