திருச்சி மேல குழுமணி காவல்கார தெருவில் உள்ள ராஜகாளியம்மன், பெரியகாண்டியம்மன், பனையடி கருப்பு சாமி கோயிலில் ஆண்டு தோறும் கார்த்திகை குட்டி குடி திருவிழா நடைபெறுவது வழக்கம். கடந்த இரண்டு ஆண்டுகளாக ஊரடங்கு காரணமாக திருவிழா நடைபெறவில்லை. இந்த ஆண்டு வழக்கம் போல திருவிழா நடைபெற்றது. கோப்பு உய்யகொண்டான் வாய்க்கால் பாலத்தில் இரவு கரகம் பாலிக்கும் நிகழ்ச்சியுடன் குட்டிகுடி திருவிழா நடைபெற்றது. அதன் பின்னர் அம்மன் கொலுவில் வைக்கப்பட்டு, சிறப்பு அபிஷேக அலங்காரம் நடைபெற்றது. தொடர்ந்து பால்குடம், தீர்த்தகுடம் எடுத்தும், அலகு குத்தியும் பக்தர்கள் ஊர்வலமாக வந்து நேர்த்தி கடன் செலுத்தினர். இதனை தொடர்ந்து மருளாளிகள் முக்கிய வீதிகளில் உலா வந்தனர். அப்போது பக்தர்கள் காணிக்கையாக கொடுத்த ஆடு, கோழிகளின் ரத்தத்தை மருளாளிகள் குடித்து பக்தர்களுக்கு அருள்வாக்கு வழங்கினர். இந்த விழாக்களில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.