இந்தி நடிகர், இயக்குனர் , தயாரிப்பாளர் , எழுத்தாளர் உள்ளிட்ட பன்முகங்களை கொண்டவர் மனோஜ் குமார்(87) . இவர் தேசபற்றுமிக்க படங்களில் அதிகமாக நடித்திருப்பதால் ‘பாரத் குமார்’ என்று ரசிகர்களால் அழைக்கப்படுகிறார். இவரின் ‘புரப் அவுர் பஸ்சிம்’ படம் இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.யாத்கார், பெஹ்சான், மேரா நாம் ஜோக்கர் உள்ளிட்டவைகள் இவரின் சிறந்த படங்களாகும்.
இவ்வாறு தனது நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்த இவர் கடந்த 1992-ல் பத்மஸ்ரீ விருதையும், 2015-ல் இந்திய சினிமா துறையில் மிக உயர்ந்த விருதான தாதாசாகேப் பால்கே விருதையும் பெற்றார். இதற்கிடையில், உடல்நல குறைவு காரணமாக கடந்த பிப்ரவரி 21-ம் தேதி மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மனோஜ் குமார் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் தீவிர சிகிச்சை பெற்றுவந்தநிலையில், இன்று அதிகாலை 4.03 மணி அளவில் மனோஜ்குமார் உயிர் பிரிந்தது.
அவரது மறைவுக்கு இந்தி திரைப்பட உலகம் அஞ்சலி செலுத்தி வருகிறது. மகாராஷ்டிரா அரசியல் கட்சித்தலைவர்களும், அஞ்சலி செலுத்தினர்.
மனோஜ்குமாரின் இயற்பெயர் ஹரிகிரிஷன் கோஸ்வாமி ; இன்றைய பாகிஸ்தானில் உள்ள கைபர் பக்துன்க்வா என்ற இடத்தில் பிறந்தார். பாகிஸ்தான் பிரிந்தபோது மனோஜ்குமார் குடும்பம் டில்லிக்கு குடிபெயர்ந்தது.