Skip to content

அகதிகள் முகாமில் பிறந்தோருக்கு குடியுரிமை…உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை உயர் நீதிமன்றத்தில், சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் ரவிகுமார் தாக்கல் செய்த மனுவில், ‘தமிழகத்தில் உள்ள இலங்கை தமிழர்கள் அகதிகள் முகாமில் பிறந்த குழந்தைகளுக்கு இந்திய குடியுரிமை வழங்க உத்தரவிட வேண்டும். இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு அகதிகளாக வந்த 94 ஆயிரம் பேரில் 59,500 பேர் முகாம்களில் உள்ளனர்.

இந்த முகாம்களில் வளரும் குழந்தைகள் கல்வி, வேலை வாய்ப்பு உரிமைகளை பெற இயலாததால், அகதிகள் முகாமில் பிறந்த குழந்தைகளுக்கு இந்திய குடியுரிமை வழங்கக் கோரி அளித்த மனு மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்நிலையில், 2022-ம் ஆண்டு டிசம்பர் 14-ம் தேதி மத்திய உள்துறை அமைச்சகம், முறையான பயண ஆவணங்கள் இல்லாமல் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் குடியுரிமை பெற உரிமையில்லை என உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவை ரத்து செய்து, தமிழகத்தில் உள்ள அகதிகள் முகாமில் பிறந்த குழந்தைகளுக்கு குடியுரிமை வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ என மனுவில் கோரியிருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்கபுர்வாலா, நீதிபதி பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், ‘இந்த மனு பொதுப்படையாக உள்ளது. முகாமில் இருப்பவர்கள் குறித்த விவரங்கள் இல்லாமல் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.முகாம்களில் பிறந்தவர்கள் குடியுரிமை கோரி விண்ணப்பித்தால், அதை குடியுரிமை சட்டத்துக்கு உட்பட்டு பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும்’ என உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!