தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் ஆளும் கட்சி திமுகவுக்கு நிதி நெருக்கடி உள்ளிட்ட பல்வேறு நெருக்கடிகளை கொடுத்து வரும் மத்திய அரசு, இப்போது அமலாக்கத்துறை மூலம் தமிழ்நாட்டில் நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கி உள்ளது.
இதன் முதல் கட்டமாக கடந்த சில தினங்களுக்கு முன் தமிழ்நாட்டில் டாஸ்மாக் தலைமை அலுவலகம் மற்றும் மதுபான ஆலைகளில் திடீர் சோதனை நடத்தினர். பின்னர் சட்டமன்றத்தில் பட்ஜெட் தாக்கலுக்கு முதல்நாள், தமிழகத்தில் டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி மோசடி என செய்திகள் வெளியிட்டனர்.
இந்த நிலையில் டாஸ்மாக் விவகாரத்தில் அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என டாஸ்மாக் நிறுவனம் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் 3 மனு தாக்கல் செய்யப்பட்டது.
மாநில அரசின் அனுமதி இல்லாமல் டாஸ்மாக் விவகாரம் தொடர்பாக சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க அமலாக்கத்துறைக்கு தடை விதிக்க வேண்டும் விசாரணை என்ற பெயரில் டாஸ்மாக் நிறுவனத்தின் அதிகாரிகளையோ அல்லது ஊழியர்களையோ துன்புறுத்துவதற்கு தடை விதிக்க வேண்டும். கடந்த 6-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை நடைபெற்ற அமலாக்கத்துறையின் சோதனையையும், அப்போது ஆவணங்களை பறிமுதல் செய்ததையும் சட்டவிரோதம் என அறிவிக்க வேண்டும்” என்று அந்த மனுக்களில் கூறப்பட்டிருந்தது.
அந்த மனுக்கள் இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி கூறியதாவது:
டாஸ்மாக்கில் சோதனை நடத்த அமலாக்கத்துறைக்கு எந்த அதிகாரமும் இல்லை. சோதனையின்போது அமலாக்கத்துறையின் சார்பில் எடுக்கப்பட்ட சிசிடிவி காட்சிகளை தாக்கல் செய்ய வேண்டும். டாஸ்மாக் வழக்கில் பதில் மனு தாக்கல் செய்யும் வரை இந்த வழக்கில் எந்த நடவடிக்கையும் எடுக்ககூடாது.
இரவில் ஏன் சோதனை நடத்தினீர்கள். அதிகாரத்தை அமலாக்கத்துறை செயல்படுத்திய விதம், தான் எங்களை கேள்வி கேட்க வைக்கிறது. எந்த அதிகாரி தவறு செய்தார் என தெரியாமல் ஒட்டுமொத்தமாக அத்தனை அதிகாரிகளையும் சிறைபிடித்தது ஏன். ? பெண் அதிகாரிகளை ஏன் சிறை வைத்தீர்கள். இரவு நேரத்தில் ஏன் சோதனை நடத்தப்பட்டது. ED இந்த வழக்கில் பொய் சொல்ல வேண்டாம். வரும் 25ம் தேதி அமலாக்கத்துறை பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். ஒரு சில அதிகாரிகள் மனு தாக்கல் செய்தால் பரவாயில்லை. டாஸ்மாக் நிறுவனமே இதில் மனு தாக்கல் செய்துள்ளது.
3 அதிகாரிகளை 3 நாள் சிறைபிடித்ததாக அரசு கூறுகிறது. காவலாளி முதற்கொண்டு அனைவரையும் பிடித்து விசாரித்து இருக்கிறீர்கள். இரவில் சோதனை நடத்தவில்லை என்கிறீர்கள். இரவில் சோதனை நடந்ததாக செய்திகள் வந்துள்ளது. உத்தரவு பிறப்பிக்கும் நிலைக்கு எங்களை ஆளாக்க வேண்டாம். எந்த கடும் நடவடிக்கையும் எடுக்க கூடாது.
இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.