Skip to content

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு… உயர்நீதிமன்றம் தள்ளுபடி….

வேலை வாங்கி தருவதாக பணம் பெற்று மோசடி செய்ததாக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளை, மற்ற வழக்குகளுடன் சேர்த்து விசாரிக்க எதிர்ப்பு தெரிவித்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2011 முதல் 2015-ஆம் ஆண்டு வரையிலான அதிமுக ஆட்சி காலத்தில், போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி. இவர் போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கி வருவதாக கூறி மோசடி செய்ததாக, பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தனர். இதில், ரூ.2 கோடியே 80 லட்சம் பெற்று மோசடி செய்ததாக மத்திய குற்றபிரிவு காவல்துறையினர் செந்தில் பாலாஜி மீது வழக்குப் பதிவு செய்தனர்.

பின்னர், நீதிமன்றத்தில் தொடரப்பட்ட இந்த வழக்கில் உரிய விசாரணை மேற்கொள்ள உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. உத்தரவின் பேரில், வருமான வரித் துறை விசாரணை மேற்கொண்டது. அவர்கள் நடத்திய விசாரணையின் அடிப்படையில், அமலாக்கத்துறை கடந்த 2023ஆம் ஆண்டு ஜூன் மாதம் செந்தில் பாலாஜியை கைது செய்தது.

ஆனால், இந்த வழக்கில் விசாரணை எம்.பி, எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. நிலுவையில் உள்ள இந்த வழக்கில் சுமார் 2 ஆயிரம் குற்றவாளிகள் சேர்க்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்குகளுடன் 2 ஆயிரம் குற்றவாளிகளை சேர்த்து விசாரித்தால் வழக்கு முடிய 1,500 ஆண்டுகள் ஆகும். எனவே, செந்தில் பாலாஜி வழக்கை மட்டும் தனியாக பிரித்து விசாரணை செய்ய உத்தரவிடக் கோரி ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘குற்றச்சாட்டுக்கள் ஒரே மாதிரியானவை என்பதால் வழக்குகளை சேர்த்து விசாரிப்பது என்பது சிறப்பு நீதிமன்றத்தின் முடிவு’ என தெரிவிக்கப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், இந்த வழக்கில் இன்று (மார்ச் 28) தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில், காவல்துறை தரப்பு வாதத்தை ஏற்று மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

error: Content is protected !!