நெல்லைத் தொகுதி பாஜக வேட்பாளராக நைனார் நாகேந்திரன் போட்டியிட்டார். அப்போது நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் ரூ.4 கோடி ரொக்கம் கொண்டு சென்றதாக 3 பேரை பறக்கும்படை அதிகாரிகள் கைது செய்து பணத்தை பறிமுதல் செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் பாஜக வேட்பாளர் நைனார் நாகேந்திரனுக்கு கொண்டு சென்றதாக தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து அவர்களை கைது செய்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில் பாஜக பொருளாளர் சேகர், அமைப்பு செயலாளர் கேசவ விநாயகம் ஆகியோரிடமும் இந்த 4 கோடி ரூபாய் பிடிப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்த சம்மன் அனுப்பப்பட்டது. ஏற்கனவே சேகரிடம் போலீசார் விசாரித்தனர்.கேசவ விநாயகம் தேர்தல் முடிந்ததும் விசாரணைக்கு வருவதாக கூறியிருந்த நிலையில் தன் மீது விசாரணை நடத்த தடை கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதி, தடை விதிக்க மறுத்தார். இது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய போலீசாருக்கு நீதிபதி உத்தரவிட்டார். அத்துடன் வழக்கு விசாரணை ஜூன் 3ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.