அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடந்த 2019-ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கில் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் குற்றம் சாட்டபட்டுள்ள சயான் மற்றும் வாளையார் மனோஜ் ஆகியோரிடம் டில்லியை சேர்ந்த பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல் பேட்டியெடுத்து, தன்னை கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தொடர்பு படுத்தி வெளியிடுவதாகவும், அதற்கு தடை விதிக்க வேண்டும் எனவும், இதனை வெளியிட்டதற்காக தனக்கு ரூ.1.10 கோடி மான நஷ்ட ஈடாக வழங்க வேண்டும் என கோரியிருந்தார்.
அந்த வழக்கு சாட்சி பதிவு நடைமுறைக்காக மாற்று நீதிமன்றத்திற்கு உயர்நீதிமன்றத்தால் அனுப்பபட்டது. இது அனுப்பபட்டு 21 முறை சாட்சிபதிவிற்கு தள்ளி வைக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி கோரிக்கை வைத்த நிலையில், நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் அளிப்பதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்றும், சென்னையில் உள்ள தனது இல்லத்தில் வழக்கறிஞர் ஆணையர் மூலமாக சாட்சியத்தை பதிவு செய்ய வாய்ப்பளிக்க வேண்டும் என்று கூறி மனு தாக்கல் செய்திருந்தார்.
இருதரப்பு வாதங்களுக்கு பிறகு நீதிபதி பிறபித்த உத்தரவில்;எடப்பாடி பழனிசாமியிடம் சாட்சி பதிவு நடைமுறையை மேற்கொள்வதற்காக வழக்கறிஞர் ஆணையராக கார்த்திகைபாலன் என்பவரை நியமனம் செய்யது உத்தரவிட்டார். மேலும் இந்த நடைமுறையை ஒரு மாத காலத்திற்குள் முடிக்க வேண்டும் என கால அவகாசம் வழங்கியுள்ளார். தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி தொடந்த பிரதான வழக்கை டிசம்பர் 15-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.