சென்னை திருவொற்றியூரில் உள்ள ரவுடி ஒருவரின் வீட்டுக்கு, ஜூலை மாதம் போலீசாருடன், உதவி கமிஷனர் இளங்கோவன் மற்றும் போலீசார் சென்றனர். ரவுடியின் மனைவியிடம், ‘உங்கள் கணவர் ஏதேனும் குற்றங்களில் ஈடுபட்டால், கை, கால்கள் உடைக்கப்படும். கத்தியை எடுத்து கொலை வழக்கில் சிக்கினால், என்கவுன்டர் தான்’ என, ஏசி இளங்கோவன் எச்சரிக்கை விடுத்தார். ரவுடியின் வீட்டு வாசலில் வைக்கப்பட்டிருந்த ஏசி இளங்கோவனின் இந்த பேச்சு பதிவானது. இதனை எடுத்து ரவுடியின் குடும்பத்தினர் வெளியிட்டனர். இதையடுத்து, உதவி கமிஷனரின் பேச்சு குறித்து, மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து, வழக்கை விசாரணைக்கு எடுத்தது. வழக்கு விசாரணையின் போது, உதவி கமிஷனர் இளங்கோவன் ஆஜரானார். இதையடுத்து, உதவி கமிஷனர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க, கடந்த 7ல் அரசுக்கு ஆணையம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் உதவி கமிஷனர் இளங்கோவன் மனு தாக்கல் செய்தார். இந்த மனு, நீதிபதிகள் பி.பி.பாலாஜி, ஜி.அருள் முருகன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை சார்பில் வழக்கறிஞர் எம்.சினேகா ஆஜராகி, ”நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியும், துறை ரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே, ஆணைய உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும்,” என்றார். இதையடுத்து, உதவி கமிஷனர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுத்து, அது தொடர்பான அறிக்கையை, மாநகர போலீஸ் கமிஷனர், வரும் 14ம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என, கடந்த 7ல் மாநில மனித உரிமைகள் ஆணையம் பிறப்பித்த உத்தரவுக்கு, நீதிபதிகள் தடை விதித்தனர். ஆம்ஸ்ட்ராங் கொலைச் சம்பவத்தை தொடர்ந்து ரவுடிகளின் வீட்டிற்கு செல்லும் போலீசார் அவர்கைள கடுமையாக எச்சரித்து வருகின்றனர் என்பது குறிப்பிடதக்கது.