அமைச்சர் செந்தில்பாலாஜி, அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு, 18 மணி நேரம் தனி அறையில் வைத்து டார்ச்சர் செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து அமைச்சர் செந்தில்பாலாஜியின் மனைவி மேகலா சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் பரதசக்கரவர்த்தி, நிஷாபானு அமர்வில் விசாரிக்கப்பட்டது. இன்று காலை இந்த வழக்கில் மாறுபட்ட தீர்ப்பு வழங்கப்பட்டது.
ஆட்கொணர்வு மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொள்வதாகவும், செந்தில் பாலாஜியை கைது செய்தது சட்ட விரோதம் என்றும், அவரை உடனடியாக விடுவிக்கலாம் என்றும் நீதிபதி நிஷா பானு தெரிவித்தார். ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்ததல்ல என்றும் காவேரி மருத்துவமனையில் செந்தில் பாலாஜிக்கு சிகிச்சையை தொடரலாம் என்றும், செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா தொடர்ந்த மனு தள்ளுபடி செய்யப்படுவதாகவும் நீதிபதி பரத சக்கரவர்த்தி தெரிவித்தார்.
மேலும் மருத்துமனையில் இருந்து சிறைக்கு மாற்றுவது தொடர்பாக மருத்துவர்கள் பரிந்துரைக்கலாம் என்றும் சிகிச்சையில் இருக்கும் நாட்கள் நீதிமன்ற காவலாக எடுத்துக் கொள்ள முடியாது என்றும் அவர் தெரிவித்தார். அமைச்சர் செந்தில்பாலாஜி வழக்கில் இரு நீதிபதிகளின் இந்த மாறுபட்ட தீர்ப்பினால் 3-வது நீதிபதிக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதன்படி 3-வது நீதிபதியை நியமிக்குமாறு பரிந்துரை செய்து வழக்கை தலைமை நீதிபதியின் அமர்வுக்கு மாற்றி உத்தரவிடப்பட்டுள்ளது. 3-வது நீதிபதி நியமிக்கப்பட்டு அவர் மூலம் மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்படும் என்றும், 3-வது நீதிபதி அளிக்கும் தீர்ப்பே செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா தொடந்த ஆட்கொணர்வு மனுவில் தீர்ப்பாக இருக்கும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
இந்த மாறுபட்ட தீர்ப்பு குறித்து திமுக வழக்கறிஞர் சரவணன் கூறியதாவது:
அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில், உயர் நீதிமன்றத் தீர்ப்பு, அமலாக்கத்துறைக்கு பின்னடைவு, இந்தியாவில் இதற்கு முன் இப்படிப்பட்ட வாதம் முன்வைக்கப்படவில்லை. இந்தியாவில் முதன் முறையாக அமலாக்கத்துறைக்கு கைது செய்யும் அதிகாரம் இல்லை என ஒரு நீதிபதி மூலம் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இது அமலாக்கத்துறையின் அதிகார வரம்பு என்ன என்பதை சொல்லி உள்ளது. அமலாக்கத்துறைக்கு வானளாவிய அதிகாரம் கிடையாது. உச்சநீதிமன்றம் சென்றாலும் நீதிபதி நிஷா பானு வழங்கிய தீர்ப்பு தான் நிற்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.