அமலாக்க துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். தற்போது அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை அமலாக்கத்துறை அதிகாரிகள் சட்ட விரோத காவலில் வைத்ததாக கூறி செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் நிஷா பானு, பரத சக்கரவர்த்தி ஆகியோர் முன்னிலையில் நடந்தது. இரு தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் இந்த மனு மீதான தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது. அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தது சட்டவிரோதம் என நீதிபதி நிஷா பானுவும், நீதிமன்ற காவல் சட்டவிரோதமில்லை என்று நீதிபதி பரத சக்ரவர்த்தியும் மாறுபட்ட தீர்ப்பை கூறியுள்ளனர்.
இதனால் இந்த வழக்கில் 3வது நீதிபதியை நியமிக்க தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் அமைச்சர் தொடர்ந்து தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற நீதிபதி பரதசக்கரவர்த்தி அனுமதித்துள்ளார். அவர் உடல்நிலை முற்றிலும் சரியான பிறகு அமலாக்கத்துறை தங்கள் காவலில் எடுத்து விசாரிக்கலாம், ஆஸ்பத்திரியில் உள்ள நாட்கள் நீதிமன்ற காவலாக கருதப்படாது என்றும் பரதசக்கரவர்த்தி கூறிஉள்ளார்.