திருச்சி ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன், நமது கோயில்கள் என்ற யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். அந்த யூடியூப் சேனலில் தமிழக முதலமைச்சர், துணை முதல்வர் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் எம்பார் ஜீயர் சுவாமிகளையும் அவதூறாக பேசியதாக கூறி வழக்கு தொடரப்பட்ட நிலையில், ஸ்ரீரங்கம் ரங்கராஜன் நரசிம்மனை சென்னை சைபர் கிரைம் போலீசார் அண்மையில் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். பின்னர் ரங்கராஜன் நரசிம்மன் நிபந்தனை ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில், வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ரங்கராஜன் நரசிம்மன் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கின் விசாரணை நீதிபதி இளந்திரையன் முன்பு நடைபெற்றது. அப்போது காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கோபிநாத், இந்த வழக்கை ரத்து செய்ய கூடாது என்றும், இது தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், அதற்கான வீடியோ ஆதாரங்கள் இருப்பதாகவும் கூறி கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார்.
அப்போது ரங்கராஜன் நரசிம்மன், பழிவாங்கும் நோக்கில் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது என சத்தமாக வாதிட்டார். இதனால் கோபமடைந்த நீதிபதி இளந்திரையன், இது சந்தை அல்ல; நீதிமன்றம் என ரங்கராஜன் நரசிம்மனுக்கு எச்சரிக்கை விடுத்தார். இதையடுத்து ரங்கராஜன் மன்னிப்பு கோட்டார். தொடர்ந்து இந்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிபதி,புகாரை மேற்கொண்டு விசாரிக்க முகாந்திரம் உள்ளது என்றும் விரிவான உத்தரவு பிறப்பிக்க உள்ளதாகவும் குறிப்பிட்டார்.