அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை விடுவிக்க கோரி அவரது மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு இரு வேறு தீர்ப்புகளை வழங்கியது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் நிஷாபானு மற்றும் பரத சக்கரவர்த்தி அடங்கிய அமர்வு, மாறுபட்ட தீர்ப்பு வழங்கியதை அடுத்து, வழக்கை விசாரிக்க மூன்றாவது நீதிபதியாக நீதிபதி சி.வி.கார்த்திகேயன் நியமிக்கப்பட்டார். இந்தநிலையில் நேற்று இந்த வழக்கு நீதிபதி கார்த்திகேயன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது செந்தில் பாலாஜியின் மனைவி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, இந்த வழக்கில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபில் ஆஜராகி வாதிட இருப்பதால் வரும் 11-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்தார். அமலாக்கத்துறை தரப்பில் ஆஜராகி இருந்த சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, வழக்கை விரைந்து விசாரித்து முடிக்க வேண்டும் என்றும் இந்த வழக்கில் மீண்டும் வாதங்கள் நடத்தி வழக்கை இழுத்தடிக்கக்கூடாது என்றும் எனவே வழக்கை சனிக்கிழமை ஒருநாளில் விசாரிக்கலாம் என்றும் கோரிக்கை விடுத்தார். அதற்கு நீதிபதி, இந்த வழக்கை சனிக்கிழமை முழு நாள் விசாரிக்க தலைமை நீதிபதியிடம் அனுமதி கோரப்படும் என்று தெரிவித்தார். மேலும் வழக்கு விசாரணையை விரைவில் முடிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதை கருத்தில் கொள்ள வேண்டும் என சுட்டிக்காட்டிய நீதிபதி கார்த்திகேயன், இரு நீதிபதிகளும் எந்த கருத்தில் முரண்பட்டு இருக்கிறார்கள் என்பது குறித்த விவரங்களை மனுவாக தாக்கல் செய்யும்படி இரு தரப்புக்கும் அறிவுறுத்தினார். அமைச்சர் செந்தில் பாலாஜி நள்ளிரவு 1:39 மணிக்கு கைது செய்யப்பட்டதாகவும் 1:41 மணிக்கு கைது செய்யப்பட்டதாகவும் கூறப்படுவதில் சந்தேகம் எழுவதால், இந்த வழக்கின் அனைத்து புலன் விசாரணை ஆவணங்களையும் தாக்கல் செய்ய வேண்டும் என அமலாக்கத்துறைக்கு நீதிபதி உத்தரவிட்டார். மேலும், இந்த வழக்கில் எதையும் மறைக்கக்கூடாது என அமலாக்கத்துறைக்கு அறிவுறுத்திய நீதிபதி, வழக்கின் விசாரணையை நாளை பிற்பகல் 2:15 மணிக்கு தள்ளி வைத்தார். அப்போது, வழக்கை ஜூலை 8-ம் தேதி விசாரணைக்கு எடுப்பது குறித்து முடிவெடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.