திரைத்துறையில் 2012ஆம் ஆண்டு தமிழில் வெளியான ‘அம்புலி’ படம் மூலம் அறிமுகமானவர் நடிகை சனம் ஷெட்டி. தொடர்ந்து மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் கவனம் செலுத்தி வருகிறார். இந்த நிலையில் விமான நிலையத்தில் மத ரீதியாக ஊழியர்கள் பாகுபாடு காட்டுவதாகத் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். இது தொடர்பாக அவரது சமூக வலைத்தள பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ள சனம் ஷெட்டி, “கோவையிலிருந்து விமானம் மூலம் சென்னை வந்தேன். வருத்தமான ஒரு நிகழ்வு நடந்தது. அதனை கண்டிப்பாக உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். அதாவது விமான நிலையத்தில் சோதனை என்ற பெயரில் விமானம் ஏறுவதற்கு முன்பு என்னையும் 2 முஸ்லிம் நபர்களையும் தனியாக அழைத்து எங்களுடைய துணிமணிகளை சோதித்தனர்.
என்னை என் பெயர் காரணத்தினாலும், அவர்கள் முஸ்லிம் ஆடைகள் அணிந்தவாறு இருந்ததாலும் இது போன்று நடந்து கொண்டனர். மொத்தம் 190 பயணிகள் இருக்கும் போது எங்களை மட்டும் தனியாக சோதித்தது மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. ஏன் எங்களை மட்டும் தனியாக அழைத்து சோதிக்கிறீர்கள்… என கேட்டேன். வழக்கமான சோதனை தான் என்று பதில் சொன்னார்கள். இதை பார்க்கும் போது என்னுடைய கேள்வி என்னவென்றால், அந்த 190 பயணிகளும் எந்த பேக்கும் எடுத்துப் போகவில்லையா… அவர்கள் எதுவும் எடுத்து வர வாய்ப்பில்லையா… சோதனை செய்தால் அனைத்து பயணிகளின் பேக்குகளை சோதிக்க வேண்டும். எங்களை மட்டும் இப்படி மத ரீதியாக பாகுபாடு காட்டி சோதனை செய்வது எங்களைப் புண்படுத்துகிறது. முதலில் மத ரீதியான பாகுபாடுகளை நிறுத்த வேண்டும். இது எவ்வளவு பெரிய கேவலம்.” என்று காட்டமாக பேசியுள்ளார்.