நடிகை கௌதமி அளித்த நில மோசடி புகாரில் தலைமறைவாக உள்ள அழகப்பன் மற்றும் அவருடைய மனைவி நாச்சியம்மாள் வெளிநாடு தப்பிச் சென்று இருக்கலாம் என்ற தகவலால் அவர்களுக்கு சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் லுக் அவுட் நோட்டீஸ் வழங்கியுள்ளனர்.
அதன்படி, சிவகங்கை மாவட்டம், கோட்டையூரில் உள்ள அழகப்பன் வீட்டில் விசாரணைக்கு சென்ற காவல்துறையினர், மோசடி செய்யப்பட்ட நிலம் தொடர்பான ஆவணங்கள் எதுவும் உள்ளதா என ஆய்வு மேற்கொண்டனர். மேலும், மோசடி செய்யப்பட்டதாகக் கூறப்பட்ட நிலத்தின் ஆவணங்களைச் சரிபார்க்கும் பணியையும், காரைக்குடி வருவாய்த்துறை அதிகாரிகள் உதவியோடு, சென்னை பொருளாதார குற்றப்பிரிவுக் காவல்துறையினர் மேற்கொண்டனர்.
அதன்படி அக்டோபர் 31ம்தேதி நண்பகல் தொடங்கிய அந்த பணி நள்ளிரவில் நிறைவுப் பெற்றது. அதன் பின், சோதனைச் செய்யப்பட்ட அறைகளுக்கு சீல் வைக்கப்பட்டன. அத்துடன், முக்கிய ஆவணங்களைச் சென்னை காவல்துறை கைப்பற்றினர்.
இந்நிலையில், தலைமறைவாக உள்ள அழகப்பன், அவரது குடும்பத்தினர் உட்பட 6 பேரை பிடிக்க மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. 6 முறை சம்மன் அளித்தும் அழகப்பன் உட்பட குற்றம்சாட்டப்பட்டுள்ள நபர்கள் ஆஜராகவில்லை என மத்திய குற்றப்பிரிவு போலீஸார் தெரிவித்திருந்த நிலையில், அழகப்பனும் அவரது மனைவியும் வெளிநாடு தப்பி சென்றிருக்கலாம் என்பதால் அவர்கள் இருவருக்கு லுக் அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.