Skip to content
Home » தில்லானா மோகனாம்பாள்’ புகழ் நாதஸ்வரக் கலைஞர் பொன்னுசாமி காலமானார்…

தில்லானா மோகனாம்பாள்’ புகழ் நாதஸ்வரக் கலைஞர் பொன்னுசாமி காலமானார்…

  • by Authour

நடிகர் சிவாஜி கணேசன் நடிப்பில் வெளிவந்த ‘தில்லானா மோகனாம்பாள்’ படத்தில் ஒலித்த நாகஸ்வர இசையை தனது சகோதரர் எம்.பி.என்.சேதுராமனுடன் இணைந்து இசைத்த நாகஸ்வரக் கலைஞர் எம்.பி.என்.பொன்னுசாமி (90) மதுரையில் நேற்று காலமானார்.

தில்லானா மோகனாம்பாள் திரைப்படம்

1968-ம் ஆண்டு வெளியான ‘தில்லானா மோகனாம்பாள்’ படத்தில் சிவாஜி கணேசன், பத்மினி,  டிஎஸ்.பாலையா, நாகேஷ், உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த படத்தை ஏ.பி.நாகராஜன் இயக்கியிருந்தார்.

கே.வி.மகாதேவன் இசையில் இந்த படத்தில் இடம்பெற்ற அத்தனை பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. மேலும் இந்த படத்தில் இடம் பெற்ற ‘நலந்தானா’ என்ற பாடல் இன்றும் பல படங்களில் நாயகன்- நாயகி நலம் விசாரிப்பது போன்ற காட்சிக்குப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சிவாஜியின் நடிப்பு வழக்கம்போல் இந்த படத்திலும் அசத்தலாக இருந்தது என்றும் கூறுமளவுக்கு நாதஸ்வர கலைஞராக வாழ்ந்திருந்தார்.

 

அதேபோல் ‘தில்லானா மோகனாம்பாள்’ படத்தில் இடம்பெற்ற நாதஸ்வர காட்சிகள் அனைத்துமே பெரிய அளவில் பாராட்டுக்களைப் பெற்றது. இதில் திரையில் சிவாஜியும் அவரது குழுவினரும் தான் இதை இசையமைத்தாக ரசிகர்களுக்கு தெரிந்திருந்தாலும், உண்மையாக நாதஸ்வரம் வாசித்தவர்கள் மதுரையைச் சேர்ந்த நாதஸ்வர வித்வான்களான எம்.பி. என்.சேதுராமன், பொன்னுசாமி சகோதரர்கள் தான்.

 

எம்.பி.என்.பொன்னுசாமி

காரைக்குடியில் திருமண விழாவில் சகோதரர்கள் சேதுராமன் மற்றும் பொன்னுசாமி இணைந்து நாதஸ்வரம் வாசித்தபோது ‘தில்லானா மோகனாம்பாள்’ படத்தில் பணியாற்றும் வாய்ப்பை இயக்குநர் ஏ.பி.நாகராஜன் மூலம் பெற்றுள்ளனர். 1977-ல் தமிழக அரசு எம்.பி.என்.பொன்னுசாமிக்கு கலைமாமணி விருதை வழங்கியது. 1997-ல் கிருஷ்ண கான சபாவின் சங்கீதா சூடாமணி விருதை பெற்றுள்ளார். இந்த நிலையில் வயது மூப்புக்காரணமாக நாதஸ்வரக் கலைஞர் எம்.பி.என்.பொன்னுசாமி மதுரையில் நேற்று காலமானார். அவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *