உடல்நலக்குறைவால் ஐதராபாத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் சரத்பாபு இன்று காலமானார். அவருக்கு வயரு 72.
தமிழில் நிழல் நிஜமாகிறது, உதிரிப்பூக்கள், நெஞ்சத்தைக் கிள்ளாதே , முள்ளும் மலரும், அண்ணாமலை, முத்து உள்ளிட்ட தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் 200க்கும் அதிகமான படங்களில் நடித்தவர் சரத்பாபு. சிறுநீரக நோய்க்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் இன்று காலமானார்.
தற்போதைய ஆந்திர மாநிலம் அமடலாவலசா என்ற கிராமத்தில் 31.7.1951ல் பிறந்தார். இவரது இயற் பெயர் சத்யம் பாபு திட்சிதுலு. 1973ல் தெலுங்கு படத்தில் அறிமுகமானார். 1978ல் பாலசந்தரின் நிழல் நிஜமாகிறது படத்தின் மூலம் தமிழுக்கு வந்தார்.
இவருக்கு 2 மனைவிகள். ஒருவர் நடிகை ரமாபிரபா. இவர் தமிழில் பல படங்களில் நடித்துள்ளார். இன்னொருவர் சினேகா. இருவருடனும் விவாகரத்து ஆகி விட்டது.
ரமாபிரபாவுடன் 1980ல் திருமணம் நடந்தது. ஆனால் அந்தத் திருமணத்தின் ஆயுள் வெறும் 8 வருடங்களே! பிறகு இருவரும் விவாகரத்தாகி பிரிந்து விட்டனர். பிறகு சரத்பாபு வில்லன் நடிகர் நம்பியாரின் மகள் சினேகா நம்பியாரைத் திருமணம் செய்திருந்தார். அந்தத் திருமணமும் கடந்த 2016 ம் ஆண்டு விவாகரத்தில் முடிந்தது.