கடந்த டிசம்பர் மாதத்தில் வந்த சென்னை வெள்ளத்தை அடுத்து, தென் தமிழக மாவட்டங்களான தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களும் வெள்ளப் பாதிப்புக்கு உள்ளானது.
இதனையடுத்து, சென்னை வெள்ள பாதிப்புகளுக்குக் குரல் கொடுத்த திரைப்பிரபலங்கள் ஏன் தென் தமிழக மாவட்டத்திற்கு உதவவில்லை எனப் பலரும் கேள்வி எழுப்பினர். இதனையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நடிகர் விஜய், நிவாரணப் பொருட்களும் நிதியுதவியும் வழங்கினார். அதே நாளில் நடிகர் டி.ராஜேந்தர் மக்களுக்கு உதவியுள்ளார்.
இவர்களை அடுத்து நடிகர் பிரசாந்தும் அங்கு மக்களைச் சந்தித்து நிதியுதவி வழங்கியுள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “மக்களுக்கு உதவி செய்வதைப் பார்க்கும் போது சந்தோஷமாக உள்ளது. நிச்சயம் இந்த இயற்கைப் பேரிடர்களில் இருந்து நாம் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்.
அப்போதுதான் அடுத்த முறை இது போல நடக்காமல் தடுக்க என்ன வழி என்பதை ஆலோசனை செய்ய முடியும். அரசும் அதற்கேற்பத்தான் பல விஷயங்களை மக்களுக்காக செய்து வருகிறது. நானும் என்னால் முடிந்ததை செய்திருக்கிறேன். நடிகர்களும் தொடர்ந்து உதவிகளைச் செய்து வருவது சந்தோஷத்தை கொடுக்கிறது” என்றார்.
அவருடைய படங்கள் குறித்தானக் கேள்வி வந்தபோது, “சினிமாவில் மீண்டும் எண்ட்ரி கொடுத்திருக்கிறேன். விஜயுடன் இப்போது ‘GOAT’ படத்தில் நடித்து வருகிறேன். படம் நன்றாக வந்திருக்கிறது” என்று பதிலளித்தார்.