தனியார் தொலைக்காட்சியில் நகைச்சுவை நிகழ்ச்சி மூலம் பிரபலமான பாலா, தற்போது சினிமாவிலும் நகைச்சுவை நடிகராக நடித்து வருகிறார். இதன் மூலம் கிடைக்கும் பணத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார்.
மலைக்கிராம மக்களுக்கு ஆம்புலன்ஸ், சென்னையில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட 200 குடும்பங்களுக்கு தலா ரூ.1000 வழங்கினார். மேலும், தாம்பரம் அருகே அனகாபுத்தூர் பகுதியில் கர்ப்பிணிகளுக்கு மருத்துவ சேவைக்காக இலவச ஆட்டோ சேவையை வழங்கினார். இவரது உதவியைப் பார்த்து பாராட்டிய நடிகர் ராகவா லாரன்ஸ், பாலா செய்யும் நல்ல விஷயங்களில் இனி தன்னுடைய பங்கும் இருக்கும் எனக் கூறினார்.
இந்நிலையில், சினிமாவில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து வந்த பாலாவை ஹீரோவாக்குவேன் என ராகவா லாரன்ஸ் சொல்லி இருக்கிறார். சமீபத்தில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ‘டான்ஸ் ஜோடி டான்ஸ்’ நிகழ்ச்சியின் ஃபைனல் நடந்தது. அதில் சிறப்பு விருந்தினராக ராகவா லாரன்ஸ் பங்கேற்றார். அப்போது பேசிய லாரன்ஸ், “பாலாவை ஹீரோவாக்கப் போகிறேன். அவருக்கு ஏற்ற கதைகள் இருந்தால் இயக்குநர் என்னை அணுகுங்கள்” என்று சொல்லி ஹீரோ பாலா எனவும் அவரை உற்சாகப்படுத்தினார்.
இதைக்கேட்டு நெகிழ்ந்து போன பாலா, லாரன்ஸை கட்டியணைத்து நன்றி சொன்னார். ரசிகர்களும் இந்த அறிவிப்பால் உற்சாகமடைந்துள்ளனர். இதற்கு முன்பு மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் மகன், சண்முகப்பாண்டியன் ஹீரோவாக நடிக்கும் ‘படைத்தலைவன்’ படத்திலும் அவருக்கு உதவும் விதமாக சிறப்புத் தோற்றத்தில் லாரன்ஸ் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.