கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மட்டும் ஆண்டுக்கு 700 விபத்துக்கள் நடக்கிறது. ஒரு மாதத்தில் 60 விபத்துகளும் ஒரு நாளைக்கு குறைந்தபட்சமாக 2 பேர் பேர் விபத்துகளில் சிக்கி உயிரிழப்பதாக புள்ளி விபரங்கள் கூறுகின்றன. விபத்துகளில் சிக்குபவர்கள் ஹெல்மெட் அணியாமல் இருந்தால் தலையில் அடிபட்டு உயிரிழக்கும் சூழல் ஏற்படுகிறது. எனவே அனைவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிந்து வாகனங்களில் பயணம் செய்ய வேண்டும் என தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இன்று செப்டம்பர் 14 உலக முதலுதவி தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. ஓசூர் பாகலூர் சாலையில் உள்ள சந்திரசேகரா என்ற தனியார் மருத்துவமனை சார்பில் இன்று ஹெல்மெட் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது இதில், எமன் வேடமிட்ட ஒருவர் கையில் பாசக்கயிறும், கடாயுதமும் வைத்து கொண்டு அந்த பகுதியில் சாலையில் ஹெல்மெட் அணியாமல் சென்றவர்களை பாசக்கயிறு வீசி அழைத்தார். ஹெல்மெட் அணியாமல் சென்றவர்களுக்கு
ஹெல்மெட் அணிய வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தி அனைவருக்கும் இலவசமாக ஹெல்மெட் வழங்கப்பட்டது. கிருஷ்ணகிரி எம்பி கோபிநாத் பொதுமக்களுக்கு இலவசமாக ஹெல்மெட்டுகளை வழங்கினார் அதேபோல, காவல்துறை மற்றும் தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் ஊழியர்கள் ஆகியோர் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு இலவசமாக ஹெல்மெட்டை வழங்கினர்.
சாலையில் இருசக்கர வாகனங்களில் சென்றவர்களுக்கு இலவசமாக ஹெல்மெட் வழங்கப்பட்டதை அறிந்த ஏராளமானோர் ஹெல்மெட் வாங்க மருத்துவமனையை நோக்கி இருசக்கர வாகனங்களில் படையெடுத்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் கூட்டம் காணப்பட்டது. சுமார் 200க்கும் மேற்பட்டோருக்கு இலவசமாக ஹெல்மெட் வழங்கப்பட்டது.