தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் பெரு வெள்ளத்தில் ரயிலில் சிக்கி தவித்த கர்ப்பிணி பெண் நேற்று ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பிரசவ வலியுடன் வந்த அவருக்கு இன்று ஆண் குழந்தை பிறந்துள்ளது.



இந்த ரயிலில் 700க்கும் மேற்பட்ட பயணிகள் சிக்கி தவித்தனர். ரயில் நிலையத்தை சுற்றிலும் கடுமையாக வெள்ளம் சூழ்ந்ததால் அவர்களை மீட்பதில் சிரமம் ஏற்பட்டது.
இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டம் ஶ்ரீவைகுண்டம் பகுதி கொங்கராய குறிச்சியை சேர்ந்த அனுசுயா (27) என்ற நிறைமாத கர்ப்பிணிப் பெண்ணும் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டார். அவரை நேற்று மதியம் விமானப்படையினர் ஹெலிகாப்டர் மூலமாக பத்திரமாக மீட்டு சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் இன்று அதிகாலையில் ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தை 3 கிலோ எடையுடன் ஆரோக்கியமாக உள்ளது., தாயும் சேயும் நலமாக உள்ளதாகவும் மருத்துவமனை டீன் ரத்தினவேல் தெரிவித்தார்.