தமிழ்நாட்டில் இன்று ( செவ்வாய்) பல மாவட்டங்களில் மிக பலத்த மழை முதல் மிதமான மழை வரை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று தகவல் அளித்திருந்தது. அதன்படி இன்று அதிகாலை முதல் நெல்லை, ராமநாதபுரம், நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. திருவாரூர் மாவட்டத்தில் பரவலாக கனமழை பெய்து வருகிறது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் அதிகாலையில் மிதமான மழை பெய்தது. சிறிது நேரத்தில் மழை ஓய்ந்தபோதிலும், வானம் மழைக்கான அறிகுறியுடன் காணப்பட்டது. இதனால் இன்று காலை பள்ளிக்கும், பணிக்கும் சென்றவர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளானார்கள்.
பூமத்திய ரேகையை ஒட்டிய வடகிழக்கு இந்தியப் பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் அறிவித்திருந்தது. சென்னையிலும் இன்று மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.