சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்ட அறிக்கை… தமிழக பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காணப்படுகிறது. இது, தற்போது மன்னார்வளைகுடா, குமரிக்கடல் மற்றும் இலங்கை கடலோரபகுதிகளின் மீது காணப்படுகிறது; மேற்கு நோக்கி நகரும் போது, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் கனமழை துவங்கும். இந்த அமைப்பு அப்படியே தொடர்ந்தால், தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில், அடுத்த சில நாட்களுக்கு தொடர் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இதன் அடிப்படையில், கோவை, நீலகிரியில் இன்று மிக கனமழை பெய்யலாம். இதற்கான, ‘ஆரஞ்ச்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, மதுரை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு மாவட்டங்களிலும் கனமழை பெய்யும். பிற மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை கோவை, நீலகிரியில் மிக கனமழையும், திருப்பத்துார், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், மதுரை, தேனி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யும் என கூறப்பட்டுள்ளது.