சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பு… தென்மாவட்ட கடலோர பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கில் சுழற்சி நிலவுகிறது. இதனால், சில மாவட்டங்களில் மிக கனமழையும், பல மாவட்டங்களில் கனமழையும் பெய்யும். குறிப்பாக
இன்று: தென்காசி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் மிக கனமழை. கன்னியாகுமரி, திருநெல்வேலி, துாத்துக்குடி, விருதுநகர், மதுரை, திருப்பூர், கோவை, நீலகிரி, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் திருப்பத்துார் மாவட்டங்களில் கனமழை பெய்யும்.
நாளை: கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் மிக கனமழை. நீலகிரி, கோவை, திருப்பூர், துாத்துக்குடி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.
இதேபோல், வரும், 20, 21ம் தேதிகளில், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மாவட்டங்களில், மிக கனமழையும், மற்ற மாவட்டங்களில் கனமழையும் பெய்யும். சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் மிதமான மழை பெய்யும். அதிகபட்சம், 33 டிகிரி செல்ஷியஸ் வரை வெப்பம் பதிவாகும். குமரிக்கடல், மன்னார் வளைகுடா, தென் மாவட்ட கடலோரப் பகுதி, கேரள கடலோர பகுதிகள் மற்றும் இலங்கை கடலோரப் பகுதிகளில், மணிக்கு, 55 கி.மீ., வேகத்தில் சூறாவளி காற்று வீசும். எனவே, நாளை முதல் 21ம் தேதி வரை மீனவர்கள், இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.