தமிழக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை… தமிழக வடமாவட்டங்களில் பெரும்பாலான இடங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்துள்ளது. நேற்று காலை நிலவரப்படி 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் 50 செ.மீ., மழை பெய்துள்ளது. அடுத்தபடியாக விழுப்புரம் மாவட்டம் கெடார், 42, சூரப்பட்டு, 38, விழுப்புரம், 35; தர்மபுரி மாவட்டம் அரூர், 33; விழுப்புரம் முண்டியம்பாக்கம், கோலியனுார், கள்ளக்குறிச்சி மாவட்டம் திருப்பாலபந்தல், 32, மடம்பூண்டியில் 31; விழுப்புரம் மாவட்டம் முகையூர், வளவனுாரில், 30 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. வங்கக்கடலில் உருவான ‘பெஞ்சல்’ புயல் நவ., 30 இரவு புதுச்சேரி அருகே கரையை கடந்தது. பின் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது. நேற்று காலை நிலவரப்படி இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மேலும் வலுவிழந்து வடமாவட்டங்கள் மற்றும் உள்மாவட்டங்களில் நிலவியது. இந்த அமைப்பு இன்று தென்கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு அரபிக்கடலுக்கு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தமிழகத்தில் அனேக இடங்கள், புதுச்சேரி, காரைக்காலில் இன்று இடி மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. டிச., 8 வரை இந்த மழை நீடிக்கலாம். மதுரை, திண்டுக்கல், தேனி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், திருச்சி, பெரம்பலுார், திருப்பத்துார் மாவட்டங்களில், இன்று கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.