தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் தாங்க முடியாத அளவுக்கு இருந்து வருகிறது. அதிலும் குறிப்பாக வட உள்மாவட்டங்கள், உள் மாவட்டங்களில் வீசும் வெப்ப அலையால், அந்த மாவட்டங்களில் வெப்பம் சுட்டெரித்து வருவதை பார்க்க முடிகிறது.இது ஒரு புறம் இருக்க வெயிலுக்கு இதமாக, கடந்த 2 தினங்களாக தமிழ்நாட்டில் சில இடங்களில் மிதமான முதல் கனமழை பெய்து வருகிறது. அந்தவகையில்
காற்றின் திசை மாறுபாடு காரணமாக இன்றும், நாளையும் தமிழகத்தில் சில இடங்களில் மிதமான மழையும், ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, இன்று தமிழ்நாட்டில் சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் மணிக்கு 30 முதல் 40 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றுடன் மிதமான மழையும், நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, நெல்லை, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருப்பத்தூர் ஆகிய 14 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும். நாளை தமிழ்நாட்டில் சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் காற்றுடன் மிதமான மழையும், நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, தென்காசி, விருதுநகர், நெல்லை, ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை மையம் அறிவித்துள்ளது.
இந்த நிலையில் இன்று காலை முதல் தமிழகத்தின் வட மாவட்டங்கள், காவிரி டெல்டா மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது. சில இடங்களில் பலத்த காற்றுடன் கனமழையும், சில இடங்களில் மிதமான மழையும் கொட்டியது.குறிப்பாக திருவண்ணாமலை, விழுப்புரம், வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் கனமழை கொட்டியது.
தஞ்சை மாவட்டம் திருவையாறு பகுதியில் இன்று காலை 8.45 மணி முதல் பலத்த மழை கொட்டியது. தஞ்சை நகரில் மிதமான தூறல் காணப்பட்டது. இது போல பூதலூர் சுற்றுவட்டாரத்திலும் மழை பெய்தது. திருவாரூர், நன்னிலம், விளமல் பகுதியிலும் கனமழை கொட்டியது.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம், செந்தூறை, திருமானூர் பகுதிகளில் இன்று காலை மழை பெய்தது. மயிலாடுதுறை நகரில் காலை 9 மணிக்கு மேகங்கள் திரண்டு கனமழை கொட்டுவதற்கான சூழல் காணப்பட்டது. திடீரென பலத்த காற்று வீசியதால் மேகங்கள் கலைந்தன. இதனால் மழை பெய்யவில்லை.் அதே நேரத்தில் கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம் சுற்றுவட்டாரத்தில் மழை பெய்தது.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பகுதியில் கொட்டிய மழையால் அங்குள்ள அரசு ஒழுங்கு முறை விற்பனை நிலையத்தில் மழைநீர் தேங்கியது. விற்பனை செய்வதற்கு கொண்டு வந்து வைத்திருந்த நெல் மூட்டைகள் மழையில் நனைந்தன.
திருச்சி மாவட்டத்தில் இன்று காலை வெயிலின் தாக்கம் குறைந்து காணப்பட்டது. காலையில் திருச்சி சோமரசம்பேட்டை பகுதியில் லேசாக மழை தூறல் போட்டது. இதனால் காவிரி டெல்டா மற்றும் வட மாவட்டங்களில் இன்று காலை குளிர்காற்று வீசியது. இதனால் கடந்த ஒருமாதமாக வெப்ப அலையில் சிக்கி தவித்த மக்கள் சற்று மகிழ்ச்சி அடைந்தனர். ஊட்டியில் இருப்பது போன்ற இதமான காற்றை சுவாசித்து அனுபவித்தனர்.
தமிழ்நாட்டில் இன்று காலை சில நகரங்களில் பெய்த மழை அளவு வருமாறு: திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர், கிருஷ்ணகிரி அணை ஆகிய இடங்களில் தலா 9 செ.மீ. மழை பதிவானது. திருவண்ணாமலை 7 செ.மீ. அவலூர்பேட்டை(விழுப்புரம் மாவட்டம்), மேட்டூர், நெமூர் ஆகிய இடங்களில் தலா 5 செ.மீ. மழை பதிவானது. கிருஷ்ணகிரி, கடலூர் மாவட்டங்களில் பலத்த காற்றுடன் மழை கொட்டியபோது மரங்கள் சாய்ந்து விழுந்தன. இதில் 2பேர் பலியாகினர்.