தமிழ்நாட்டில் தஞ்சை, திருச்சி, மயிலாடுதுறை, திருவாரூர், நாகை, கரூர், உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று இரவு முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. இன்று காலையிலும் பல இடங்களில் மழை பெய்து வருகிறது. பொதுவாக இன்று தமிழ்நாடு முழுவதுமே அடைமழை காலம் போல மேக மூட்டத்துடன் வானம் லேசாக தூறிக்கொண்டே இருக்கிறது. அதே நேரத்தில் சில இடங்களில் மழை கனமாகவும் பெய்து வருகிறது.
அதே நேரத்தில் தஞ்சை , திருவாரூர் மாவட்டங்களில் பரவலாக கனமழை வெளுத்து கட்டியது. தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் இன்று காலை 6 மணி வரையிலான 24 மணி நேரத்தில் 16 செ.மீ. மழை பெய்துள்ளது. தமிழ்நாட்டில் இது தான் அதிகபட்ச மழையாக பதிவாகி உள்ளதாக தெரிகிறது. அதே நேரத்தில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் 13 செ.மீ. மழையும், தஞ்சை மாவட்டம் மதுக்கூரில் 10.6 செ.மீ, அதிராம்பட்டினம் 10.3 செ.மீ. மழை பதிவானது.
தொடர்ந்து இன்று காலையிலும் மழை தூறிக்கொண்டே இருப்பதால் கோடை காலம் என்பதே மறந்து போய்விட்டது. அவ்வப்போது குளிர்ந்த காற்றும் வீசுவதால் மக்கள் ஊட்டி, கொடைக்கானல் சீதோஷ்ணத்தை வீட்டில் இருந்தவாறே அனுபவித்து வருகிறார்கள்.
மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவிலில் பெய்த பலத்த மழையின் காரணமாக 50 ஆண்டு பழமையான புளியமரம் பிரதான சாலையில் வேரோடு சாய்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் வந்து மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர். மயிலாடுதுறை, கோமல், குத்தாலம், செம்பனார்கோவில் உள்ளிட்ட பல்வேறு இடங்களில்கன மழை பெய்தது.
கரூர், அரவக்குறிச்சி, பள்ளப்பட்டி, சின்னதாராபுரம், பரமத்தி, வேலாயுதம்பாளையம், நொய்யல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று மாலையில் கன மழை செய்தது.
இரவு பள்ளப்பட்டி கணக்குப்பிள்ளை தெரு பகுதியில் கொட்டி தீர்த்த கனமழையால் முழங்கால் அளவு தண்ணீர் தேங்கி வீடுகளுக்குள் மழை நீர் மற்றும் கழிவு நீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர். விடிய விடிய மழை தூறிக்கொண்டே இருந்தது. இன்று காலையிலும் மழை பெய்துகொண்டே இருக்கிறது.
திருச்சி மாவட்டத்திலும் நேற்று இரவு முதல் மழை தூறிக்கொண்டே இருக்கிறது. இதனால் இன்று காலை வேலைக்கு செல்கிறவர்கள் பலர் நனைந்துகொண்டே சென்றனர். பலர் குடைகளை பிடித்தபடி சென்றனர்.
மழைநீர் வெளியேற்ற நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.