இலங்கை கடலோர பகுதிகளை ஒட்டிய, தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், நேற்று முன்தினம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவியது. இது, நேற்று பகல் நிலவரப்படி, மன்னார் வளைகுடா பகுதியில் நிலவுகிறது. இந்த அமைப்பு படிப்படியாக வலு குறைந்து, தமிழகத்தின் தென் மாவட்டங்களில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவலாம். இதனால், தென் மாவட்டங்களில் இன்று பரவலாக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் எச்சரித்துள்ளது. குறிப்பாக தமிழகத்தின் தென் மாவட்டங்களில் அனேக இடங்கள், வடமாவட்டங்களில் ஒரு சில இடங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில், இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. வரும், 15 வரை மிதமான மழை தொடர வாய்ப்புள்ளது. மேலும் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, தென்காசி, துாத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில், இன்று ஓரிரு இடங்களில், கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று துவங்கி இன்று காலை வரை திருச்சியில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக மாலை துவங்கி காலை வரை மழை கொட்டி தீர்த்தது. இந்தமழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைநீர் புகுந்துள்ளது. இதனால் பொதுமக்களின் வாழ்க்கை பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் திருச்சியில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என மாவட்டக்கலெக்டர் பிரதீப்குமார் தெரிவித்துள்ளார். மேலும் கடலூர், திண்டுக்கல், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, விழுப்புரம், விருதுநகர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, கரூர், சேலம், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.