தமிழ்நாடு முழுவதும் கடந்த 10 தினங்களுக்கு முன்பு வரை வெப்ப அலை வீசியது. அதனைத்தொடர்ந்து கடந்த ஒருவாரமாக பரவலாக கோடை மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் 19ம் தேதி அந்தமான் நிக்கோபார் தீவுகளில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது.
தமிழகம் முழுவதும் ஒருவாரமாக பரவலாக கோடை மழை பெய்து வந்த நிலையில் திருச்சி மாவட்டத்தில் நேற்று தான் கனமழை கொட்டியது. திருச்சி மாநகர தவிர மற்ற இடங்களில் மழை பெய்து வந்தபோதிலும் திருச்சி மாநகரில் மழை போதிய அளவு பொய்யாமல் இருந்தது. அந்த குறையை நேற்று வருணபகவான் தீர்த்து வைத்தான்.
நேற்று மாலை 4 மணிக்கு மேல் வானம் கறுத்தது. சிறிது நேரத்தில் குளிர்காற்றுடன் மழை கோபாவேசத்துடன் கொட்டியது. கொட்டியது கொட்டியது 1 மணிநேரம் கொட்டியது. அதன் பிறகு சாந்தமான மழை தூறிக்கொண்டே இருந்தது. திருச்சி மாநகர் மட்டுமல்லாமல் மாவட்டம் முழுவதுமே மழை இதே வேகத்துடன் வெளுத்து கட்டியது.
மண்ணச்சநல்லூரில் பெய்த கனமழை காரணமாக வீடுகளுக்குள்ளும் வெள்ளம் புகுந்தது. இதுபோல திருவரங்கம் கோயில் பிரகாரங்களிலும், சமயபுரம் மாரியம்மன் கோயில் ராஜகோபுரம் பகுதிகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்தது. திருச்சி விமான நிலைய ஓடுதளத்திலும் மழை நீர் வெள்ளமாக பாய்ந்தது. அவற்றை விமான நிலைய ஊழியர்கள் உடனே அப்புறப்படுத்தினர்.திருச்சி விமான நிலையத்தில் 13 செ.மீ. மழை பதிவானது.
இதுபோல மணப்பாறை, முசிறி, துறையூர், என மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. 1 மணி நேர கனமழைக்கு பின்னர் மழையின் வேகம் குறைந்தாலும் இரவு 10 மணி வரை தூறல் போட்டுக்கொண்டே இருந்தது.