மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்தம் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறி தெற்கு சத்தீஷ்கர் மற்றும் அதை ஒட்டிய விதர்பா நிலப் பகுதியில் நிலை கொண்டுள்ளது. இருப்பினும், ஒரு புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி மத்திய மேற்கு மற்றும் அதை ஒட்டிய வட மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் 19ம் தேதி உருவாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாகவும், தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள காரணத்தாலும், தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் வலுவான காற்றுடன் கூடிய மழை இன்று பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், நீலகிரி, கோவை மாவட்ட மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும், திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்ட மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. இதே நிலை 22ம் தேதிவரை நீடிக்கவும் வாய்ப்புள்ளது. சென்னையில் பொதுவாக மேகமூட்டம் காணப்படும். நகரின் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்புள்ளது.