டில்லி உள்ளிட்ட வட இந்தியாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. டில்லி சப்தர்ஜங் பகுதி வானிலை ஆய்வு மையத்தில் நேற்று 153 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. கடந்த 1958ஆம் ஆண்டுக்குப் பிறகான 3வது அதிகபட்ச கனமழை இதுவாகும். 1958 ஜூலை 20-21ல் 266.2 மில்லி மீட்டர் மழை பதிவாகியது. இதுதான் டில்லியில் பெய்த அதிகபட்ச கனமழையாக கருதப்படுகிறது. பின்னர் 1982ம் ஆண்டு ஜூலை 25-26ல் பதிவான 169.9 மில்லி மீட்டர் கனமழை 2ஆவது அதிகபட்ச கனமழையாக கருதப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக, நேற்றும் இன்று காலை வரையுமான 24 மணி நேரத்தில் பெய்த 153 மில்லி மீட்டர் மழை 3வது அதிகபட்ச மழைப்பொழிவாகக் கருதப்படுகிறது. இதன்மூலம், 41 ஆண்டுகளுக்குப் பிறகு மிக அதிக கனமழை பதிவாகி இருக்கிறது.
இந்த கன மழை காரணமாக டில்லியின் பல்வேறு பிரதான சாலைகளில் மழைநீர் தேங்கி இருக்கிறது. பல சாலைகள் வாகனங்கள் செல்ல முடியாத நிலையில் உள்ளன. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஜாகிரா பகுதியில் இருந்த பழங்கால கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்ததில் இருவர் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர். பின்னர் அவர்கள் மீட்கப்பட்டனர். டெல்லியை ஒட்டிய குருகிராமில் பேருந்து நிலையம் உள்பட பல்வேறு பகுதிகளில் தண்ணீர் தேங்கிக் கிடக்கிறது. சில இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்ததை அடுத்து, அவற்றை அப்புறப்படுத்தும் பணிகள் நடைபெற்றன.