காஷ்மீர் மாநிலம் பெஹல்காமில் நேற்று முன்தினம் 26 பேர் தீவிரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டனர். பாகிஸ்தான் தீவிரவாதிகள் தான் இந்த செயலில் ஈடுபட்டுள்ளனர் என தெரியவந்துள்ளது.
இந்த நிலையில், பீகார் மாநிலம் மதுபானி நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி இன்ற உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: காஷ்மீரில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள். காயம் அடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தாக்குதலில் உயிரிழந்த மக்களுக்காக காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை துக்கம் அனுசரிக்கப்படுகிறது. சுற்றுலாப்பயணிகள் மீது தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் வேட்டையாடப்படுவார்கள். தாக்குதல் நடத்தியவர்கள் யாரும் தப்ப முடியாது.
கடினமான சூழலில் இந்தியாவுடன் துணை நின்ற நாடுகளுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். தாக்குதல் நடத்தியவர்கள், சதி செய்தவர்களுக்கு கற்பனை செய்ய முடியாத அளவு தண்டனை வழங்கப்படும். இந்தியாவின் தன்னம்பிக்கையை யாராலும் அசைக்க முடியாது. பயங்கரவாதிகளை இருந்த இடம் தெரியாமல் ஆக்கிவிடுவோம்” என்றார்.
