Skip to content
Home » திருச்சியில் தக்காளி விலை கடும் வீழ்ச்சி….

திருச்சியில் தக்காளி விலை கடும் வீழ்ச்சி….

  • by Authour

கடந்த சில நாட்களாக தக்காளி உற்பத்தி மற்றும் வரத்து அதிகரித்துள்ளதால், திருச்சியில் தக்காளி விலை கிலோ ரூ. 10 ஆக குறைந்துள்ளது.
திருச்சியில் காய்கனிகள் மொத்த விற்பனைச் சந்தையில் கடந்த வாரம் வரை கிலோ ரூ. 45 க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் அடுத்தடுத்த நாள்களில் படிப்படியாக குறைந்து புதன்கிழமை நிலவரப்படி கிலோ ரூ. 10 க்கு விற்பனை செய்யப்பட்டது. உற்பத்தி அதிகரிப்பு காரணமாக வரத்தும் அதிகரித்துள்ளதால் இந்த திடீர் விலைவீழ்ச்சி என விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். நட்டம் ஏற்படாத வகையில் நியாமான விலையை நிர்ணயிக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து மணப்பாறை வட்ட ஒருங்கிணைந்த விவசாயிகள் சங்கத் தலைவர் எம். அப்துல்லா கூறியது:
மணப்பாறையில் மட்டும் சுமார் 800 ஏக்கரில் தக்காளி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இம்முறை அதிக மகசூல் கிடைத்தாலும், விளைபொருட்களின் விலை கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளதால், விவசாயிகளால் லாபம் ஈட்ட முடியவில்லை. தக்காளி பயிரிட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 50,000 வரை செலவாகிறது. இச்சூழலில் வியாபாரிகள் கிலோ ரூ.10க்கு விற்பனை செய்வதால் விவசாயிகளுக்கு கிலோவுக்கு ரூ.5தான் கிடைக்கிறது. உற்பத்திச் செலவுக்கு ஏற்ப விலை கிடைக்காததால் விவசாயிகள் நட்டத்தை சந்திக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே சிறு விவசாயிகளுக்கு உதவ வேளாண் துறை முன்வர வேண்டும்” என்றார்.
காந்திச்சந்தை மொத்த காய்கறி வியாபாரி ஜெய்சங்கர் கூறுகையில், திருச்சிக்கு அண்டை மாநிலங்களான கர்நாடகா, ஆந்திரா மற்றும் தமிழகத்தில் பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, மணப்பாறை, வையம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தக்காளி வரத்து உள்ளது. காந்திச்சந்தையில் தினசரி சுமார் 5 லாரிகளில் தக்காளி வருவது வழக்கம். ஆனால் கடந்த இரு நாள்களில் இரு மடங்கு அதிகரித்துள்ளது. இதனால் குறைந்த விலைக்கு விற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. 10 நாள்களுக்கு முன், சில்லரை சந்தையில், ஒரு கிலோ தக்காளி ரூ. 60 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில் வரத்து அதிகரித்ததால் விலை குறையத் தொடங்கியுள்ளது என்றார்.
வேளாண் சந்தைப்படுத்தல் மற்றும் வேளாண் வணிகத் துறையின் மூத்த அதிகாரி ஒருவரிடம் இது குறித்து விசாரித்தபோது, ​​திருச்சியில் இரு அரசு குளிர்பதனக் கிடங்குகளும், 5 தனியார் குளிர்பதனக் கிடங்குகளும் உள்ளன. விவசாயிகள் தங்களின் தக்காளியை நியாயமான விலையில் விற்கும் முன் குறைந்தபட்சம் ஒரு வாரமாவது இந்த வசதியைப் பயன்படுத்திக் கொள்வதால், இந்த விலை வீழ்ச்சியிலிருந்து ஓரளவுக்கு மீள முடியும் என்றார்.