தமிழ்நாட்டில் வருகிற 1-ந்தேதி (புதன்கிழமை) வரை வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படும் என்றே வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது. அதன்படி, வட உள்மாவட்டங்களில் திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, காஞ்சீபுரம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் இயல்பைவிட 5 டிகிரி செல்சியஸ் அதாவது, 9 பாரன்ஹீட் வரை வெப்பம் அதிகரித்து காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல், வருகிற 1-ந்தேதி வரை மேற்சொன்ன மாவட்டங்களில் வெப்ப அலையும் வீசக்கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் இந்த இடங்களில் காலை 8 மணியில் இருந்தே வெப்பத்தின் தாக்கம் உயரும். பிற்பகல் 2 மணியளவில் வெயில் உக்கிரமாக இருக்கும். ஓரிரு இடங்களில் அதிகபட்சமாக 108 டிகிரி வரையும், அதனைத் தாண்டியும் வெப்பம் பதிவாகலாம் எனவும் ஆய்வு மையம் அறிவித்துள்ளது.