ரியலூர் மாவட்டம், தா.பழூர் ஊராட்சி ஒன்றியம், கோட்டியால் துணை சுகாதார நிலைய வளாகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சார்பில் ரூ.3.35 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 7 துணை சுகாதார நிலைய புதிய மையங்கள், 1 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் 1 வட்டார பொது சுகாதார அலகு கட்டடங்களினை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.ரத்தினசாமி தலைமையில், அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் கு.சின்னப்பா , ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
துணை சுகாதார நிலைய புதிய மையங்கள், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் வட்டார பொது சுகாதார அலகு கட்டடங்களினை திறந்து வைத்து, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் தெரிவித்ததாவது:
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிற்கிணங்க ஒவ்வொரு மாவட்டத்திலும் கட்டப்பட்டுள்ள துணை சுகாதார மைய கட்டடங்கள் திறந்து வைக்கப்பட்டும், பதிய கட்டடங்கள் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டுதல் பணிகள் நடைபெற்று வருகிறது. தொடர்ந்து ஜெயங்கொண்டத்தில் ஏற்கனவே அரசு சார்பில் கட்டப்பட்டு வருகின்ற கட்டட பணிகளை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் வழிகாட்டுதலின் படி ஜெயங்கொண்டம் மருத்துவமனை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையாக தரம் உயர்தப்பட்டுள்ளது. ஜெயங்கொண்டம் என்பதில் ஜெயம் என்பதன் பொருள் வெற்றி என்பதாகும். வெற்றிகொண்டான் இப்பகுதிக்கு பெருமை சேர்த்த மிக முக்கிய நபராவர். அவர் பேச்சினில் இப்பகுதி மக்களை மட்டுமல்ல உலக தமிழர்களையும் வெற்றிகொண்டவராக திகழ்ந்தவர்.
இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து, ஜெயங்கொண்டம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் நடைபெற்று வரும் மருத்துவமனை கட்டுமான பணிகளை நேரில் பார்வையிட்டு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் ஆய்வு செய்தார். ரூ.29 கோடி மதிப்பில் தரை தளத்துடன் கூடிய 6 தளங்களுடன் 7,422 சதுரடி பரப்பளவில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகளை பார்வையிட்ட மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பணிகளின் தற்போதைய நிலை, பணி முடிவடையும் காலம் ஆகியவற்றை கேட்டறிந்து, பணிகளை தரமாகவும், விரைவாகவும் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்து துறை இயக்குநர் (சென்னை) செல்வவிநாயகம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி.க.கவிதா, உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் ஷீஜா, அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.முத்துக்கிருஷ்ணன், இணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் மரு.மாரிமுத்து, துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் மரு.அஜிதா, ஜெயங்கொண்டம் நகர்மன்றத் தவைலர் சுமதி, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் (கட்டடம்) திருமுருகு, வட்டார மருத்துவ அலுவலர் மரு.தட்சிணாமூர்த்தி, உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் இதர அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.