தவெக சார்பில் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடத்தப்பட்ட இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் அக்கட்சியின் தலைவர் விஜய் கலந்து கொண்டு சரியாக 6.24 மணிக்கு நோன்பு திறந்தார். நோன்பு திறக்கும் நிகழ்ச்சிக்கு அக்கட்சியின் தலைவர் விஜய் இஸ்லாமியர்களின் குல்லா, வெள்ளை சட்டை, வெள்ளை வேட்டி அணிந்து வந்திருந்தார்.
இது வெறும் நிகழ்ச்சியாக மட்டுமல்லாமல், உண்மையிலேயே இன்றைக்கு ஒரு விஜய் நோன்பு இருந்திருக்கிறார். விஜய்யுடன் நோன்பு திறக்க, நூற்றுக்கணக்கான இஸ்லாமியர்களும் குவிந்தனர். ஆம், காலை முதல் உணவருந்தாமல் இருந்த அவர், நோன்புக் கஞ்சி, பேரீச்சம்பழம், சமோசா சாப்பிட்டு நோன்பு திறந்தார்.
இதனையடுத்து, நோன்பு திறக்கும் நிகழ்ச்சிக்குப் பின் தவெக சார்பில் மட்டன் பிரியாணி சிக்கன் 65 ஆகியவை பரிமாற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதது. நோன்பு துறந்ததற்கு பிறகு, இஸ்லாமியர்களுடன் முன்வரிசையில் நின்று தொழுகையில் ஈடுபட்டார்.
இதனை தொடர்ந்து பேசிய தலைவர் விஜய், “என் நெஞ்சில் குடியிருக்கும்… எனது அன்பான இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் வணக்கம், மாமனிதர் நபிகள் நாயகம் அவர்களின் வாழ்க்கையைப் பின்பற்றி, மனிதநேயத்துக்கும் சகோதரத்துவத்தையும் கடைப்பிடித்து வரும் அனைத்து இஸ்லாமிய நண்பர்களுக்கும் எனது அழைப்பை ஏற்று வந்ததற்கு எனது மனமார்ந்த நன்றி” என்று கூறினார். இறுதியில், நோன்பு திறக்கும் நிகழ்ச்சி முடிந்து பின் புறப்பட்ட விஜய், திறந்த பிரச்சார வாகனத்தின் மேல் ஏறி நின்று ரசிகர்களுக்கு கை அசைத்து வீட்டிற்கு சென்றார்.