வங்கதேச பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா, மாணவர்களின் கலவரம் தீவிரமடைந்ததை அடுத்து நேற்று மதியம் தனது பதவியை ராஜினாமா செய்து நாட்டை விட்டு வெளியேறினார். தொடர்ந்து இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள ஹிண்டன் விமானப்படை தளத்துக்கு வந்த ஹசீனா, இந்தியாவில் தஞ்சம் அடைந்தார். இன்று காலை அவர் இங்கிலாந்து சென்றதாக கூறப்படுகிறது.
இந்த முடிவுகள் குறித்து கூட்டத்தில் பேசிய அதிபர் முகமது ஷஹாபுதீன், “தற்போது இருக்கும் நாடாளுமன்றத்தை கலைத்து விட்டு, அதன்பின் வங்கதேசத்தில் இடைக்கால அரசு அமைக்கப்படும். மேலும் தற்போது நாட்டில் நிலவும் கலவர சூழலை முடிவுக்கு கொண்டுவர ராணுவ நடவடிக்கை தீவிரப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
அனைத்து அரசு அலுவலகங்கள், தனியார் அலுவலகங்கள், தொழிற்சாலைகள், பள்ளிகள், கல்லூரிகள், மதரஸாக்கள் மற்றும் பல்கலைக்கழகங்கள் என அனைத்து கல்வி நிறுவனங்களும் இன்று திறக்கப்படும்” என்று கூறினார். இடைக்கால அரசை அமைப்பதற்கு முன்பாக, நாடாளுமன்றத்தைக் கலைப்பதன் மூலம் மீண்டும் நாடாளுமன்றத்துக்கு தேர்தல் நடத்துவதற்கான வாய்ப்பு உருவாகும் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.